ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

புகழ்த்துணை நாயனார் புராணசாரம்


திருச்சிற்றம்பலம்

புகழ்த்துணை நாயனார் புராணசாரம்

புகழ்த்துணை நாயனார்

தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் (4128)
புகழ்த்துணை நாயனார் செருவில்லிபுத்தூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தவர். அவர் சிவபெருமானை முறைப்படி அர்ச்சித்து வந்தார். வருநாளில், பஞ்சம் நேர்ந்தது. நாயனார் பஞ்சத்தைக் கருதாது தமது தொண்டைக் குறையில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நாளுக்குநாள் அவர் பசியால் மெலிவுறலானார்.
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் (4129)
நாயனார் ஒருநாள் திருமஞ்சனம் மாட்டும்போது திருக்குடம் தேவதேவன் திருமுடிமீது விழுந்தது. அதுகண்ட நாயனார் சிவசந்நிதியில் விழுந்தார். அயர்ந்தார். திருவருளால் அவருக்கு உறக்கம் வந்தது.
சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் (4130)
சிவபெருமான் அவர்தம் கணவிலே தோன்றி, “பஞ்சம் ஒழியும் வரை, நாள்தோரும் ஒரு காசு இங்கே வைப்போம். அதைப் பெற்றுக்கொள்” என்று அருளிச் சென்றார். நாயனார் விழித்து எழுந்தார். ஒரு காசு பீடத்தின் கீழே இருப்பதைக் கண்டார். மகிழ்வெய்தினார். அக்காசு பெற்று வாழ்ந்து வந்தார். பஞ்சம் ஒழிந்தது. நாயனார் தமது திருத்தொண்டை வழுவாது செய்து சிவபதம் சேர்ந்தார்.
குருபூசை: ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரம்.

அதிபத்த நாயனார் புராணசாரம்


திருச்சிற்றம்பலம்

அதிபத்த நாயனார் புராணசாரம்

அதிபத்த நாயனார்

முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் (4002)
நாகப்பட்டினத்திலே நுளைப்பாடியிலே, வளைஞர் குலத்திலே பிறந்த, பரதவர்க்குத் தலைவர் அதிபத்த நாயனார் என்பவர். அவர் சிவபத்தியில் சிறந்தவர். வலைபடும் மீன்களில் தலைமீனைச் சிவபெருமானுக்கென்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே ஒரு மீன்படினும் அதனைச் சிவபெருமானுக்கென்றே அவர் கடலில் விடுவார்.
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் (4003)
சிவபெருமானின் திருவருளால் நாள்தோரும் ஒரே ஒரு மீனே கிடைப்பதாயிற்று. வழக்கம் போல அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார். அவரது செல்வம் சுருங்கிற்று. சுற்றங்கள் உணவின்றி வருந்தின.உணவின்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்துவதில்லை. சிவபத்தியில் மட்டுமே இருந்த அவர்க்குத் தளர்ச்சி தோன்றவில்லை.
ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் (4006)
ஒருநாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது. அதை வளைஞர் அதிபத்தர் முன்னிலையில் கொண்டுவந்தார். அவர் அதைக் கண்டு, "இஃதென்ன பொன் மீன்! உறுப்புகளிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன. இது சிவபெருமானுக்கு ஆக!! “ என்று அதனையும் கடலிலே விடுத்தார். அப்போது சிவபெருமான் காட்சியளித்தார். நாயனார் அகங்குழைந்து தொழுதார். சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்தருளினார்.
குரு பூசை: ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரம்.

செருத்துணை நாயனார் புராணசாரம்


திருச்சிற்றம்பலம்

செருத்துணை நாயனார் புராணசாரம்

செருத்துணை நாயனார்


சீரின் விளங்கும் அப்பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூங்கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் எனப்
பாரில் நிகழ்ந்த செருத் துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார் (4121)
திருமருகல் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் எனும் திருப்பதியில், குலம் வழுவாது சிவபெருமானது திருவடியை அடைதலே இலக்கு என்ற ஒருமை நெறியில் வாழும் சீரிய வேளாண்மைத் தொழில் செய்யும் குடியில் தோன்றி, தலைவராய் விளங்கினார் செருத்துணை நாயனார்.
உலகு நிகழ்ந்த பல்லவர் கோச் சிங்கர் உரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழித் தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி (4123)
அங்கே வழிபாட்டிக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார் பூமண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணையார் பார்த்தார். மிகுந்த சினம் கொணைடார். விரைந்து ஒடி கத்தியை எடுத்தார். அம்மையார் கூந்தலைப்பிடித்து ஈர்த்தார். கீழே தள்ளி அம்மையாரின் மூக்கை அறுத்தார்.
அடுத்த திருத் தொண்டு உலகறியச் செய்த அடல் ஏறு அனையவர்தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமைத் தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழச் செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார் (4125)
செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்
குரு பூசை : ஆவணி மாதம், பூசம் நட்சத்திரம்.

சேக்கிழார் பெருமான்

"சான்றோ ருடைத்துத் தொண்டை நாடு" 
என்பது பழமொழி. அச்சிறப்பு வாய்ந்த தொண்டை நாட்டிலே, குன்றத்தூரிலே, வேளாண் மரபிலே சேக்கிழார் குடியில் பிறந்தவர் ராமவர்மர் (திருமழப்பாடு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது). அவரது படிப்பின் வழி வந்த பெயர்  அருண்மொழித்தேவர். பின்னாளில் அவரது குலப் பெயரே விளங்களாயிற்று.  "சே" என்றால் காளை என்று பொருள் (சே ஏறு சேவடிக்கே சென்றூதாய்.... ), கிழார் என்றால் உரியவர் என்று பொருள். உழவர்கள் எருதுகளை வைத்து தொழில் புரிபவர்கள். ஆகவே வேளாண் தொழில் செய்பவர்கள் சேக்கிழார் என்று அழைக்கப்பட்டனர்.

சேக்கிழார் சிவபத்தியால் சிறந்து விளங்கினார். கல்வி கேள்விகளிலும் வல்லவராவார். அவர் குலோத்துங்கச் சோழனிடத்து முதலமைச்சாராக இருந்தார். அந்த குலோத்துங்கன் என்ற அநபாயன் சீவகசிந்தாமணி எனும் இன்பநூலை விரும்பி படிக்கிறார். அந்த காமநூலின்கண் மயக்குற்றார்.

"அரசன் எவ்வழி அவ்வழி குடிமக்கள்", முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமான் மன்னனைப் பார்த்து "நீர் சைவர், சிவ கதையை கேளாது, அவ கதையை கேட்கிறீர் ?" என்று கேட்கிறார். அதற்கு மன்னன் "சிவ கதை ஏது ? அதன் வரலாறு என்ன ?" என்று வினவினார். அப்போது நாயன்மார்களின் வரலாறுகளை எடுத்துச் சொல்கிறார் தெய்வச் சேக்கிழார். "அடியவர் வரலாறுகளை நூலாக செய்தருள்க." என்று மன்னர் வேண்டுகிறார்.

சேக்கிழார் பெருமான் சிதம்பரத்திற்கு வந்து, சிவகங்கையில் மூழ்கி, பட்டு உடுத்தி அம்பலவானரை நெருங்கும் பொழுது ஞானவானத்திலிருந்து "உலகெலாம்....." என்று இறைவனே அடி எடுத்துக் கொடுக்கிறார். பெரியபுராணத்தில் பதினைந்து இடங்களில் உலகெலாம் என வருவதைக் காணலாம். முடிகிறபோதும் "உலகெலாம்" என முடியும். சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தைப் பாடி முடித்தார்.

அநபாயச் சோழர் நூல் முற்றுப்பெற்றதைக் கேள்வியுற்றார். திருத்தொண்டர் புராணத்தைக் கேட்டுப் பேறெய்துமாறு அன்பர்களுக்கு அழைப்புகள் விடுத்தார். தில்லைக்கூத்தன் திருமுன்னர், சேக்கிழார் பெருமான் திருப்புராணத்தை ஓதிப் பொருளுரைக்கத் தொடங்கினார். அத்தொண்டு, சித்திரைத் திங்களில் திருவாதிரை நாளில் தொடங்கப்பெற்றது. மறு ஆண்டு அதே திங்களில் முற்றுப்பெற்றது. திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாந் திருமுறை என்று வழங்கலாயிற்று.

சேக்கிழார் பெருமான் தில்லையிலேயே தங்கலானார். நாடோருந் தில்லைக்கூத்தனை வழிபட்டு வந்தார். சிவபெருமான் அவருக்குத் தமது திருவடி நீழலை வழங்கினார்.

திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம்

வணக்கம் !
63 நாயன்மார்களின் வரலாற்றினை அனைவருக்கும் அறியச் செய்ய அடியேனின் சிறிய முனைப்பு இந்த வலைப்பதிவு.