"சான்றோ ருடைத்துத் தொண்டை நாடு"என்பது பழமொழி. அச்சிறப்பு வாய்ந்த தொண்டை நாட்டிலே, குன்றத்தூரிலே, வேளாண் மரபிலே சேக்கிழார் குடியில் பிறந்தவர் ராமவர்மர் (திருமழப்பாடு கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது). அவரது படிப்பின் வழி வந்த பெயர் அருண்மொழித்தேவர். பின்னாளில் அவரது குலப் பெயரே விளங்களாயிற்று. "சே" என்றால் காளை என்று பொருள் (சே ஏறு சேவடிக்கே சென்றூதாய்.... ), கிழார் என்றால் உரியவர் என்று பொருள். உழவர்கள் எருதுகளை வைத்து தொழில் புரிபவர்கள். ஆகவே வேளாண் தொழில் செய்பவர்கள் சேக்கிழார் என்று அழைக்கப்பட்டனர்.
சேக்கிழார் சிவபத்தியால் சிறந்து விளங்கினார். கல்வி கேள்விகளிலும் வல்லவராவார். அவர் குலோத்துங்கச் சோழனிடத்து முதலமைச்சாராக இருந்தார். அந்த குலோத்துங்கன் என்ற அநபாயன் சீவகசிந்தாமணி எனும் இன்பநூலை விரும்பி படிக்கிறார். அந்த காமநூலின்கண் மயக்குற்றார்.
"அரசன் எவ்வழி அவ்வழி குடிமக்கள்", முதலமைச்சராகிய சேக்கிழார் பெருமான் மன்னனைப் பார்த்து "நீர் சைவர், சிவ கதையை கேளாது, அவ கதையை கேட்கிறீர் ?" என்று கேட்கிறார். அதற்கு மன்னன் "சிவ கதை ஏது ? அதன் வரலாறு என்ன ?" என்று வினவினார். அப்போது நாயன்மார்களின் வரலாறுகளை எடுத்துச் சொல்கிறார் தெய்வச் சேக்கிழார். "அடியவர் வரலாறுகளை நூலாக செய்தருள்க." என்று மன்னர் வேண்டுகிறார்.
சேக்கிழார் பெருமான் சிதம்பரத்திற்கு வந்து, சிவகங்கையில் மூழ்கி, பட்டு உடுத்தி அம்பலவானரை நெருங்கும் பொழுது ஞானவானத்திலிருந்து "உலகெலாம்....." என்று இறைவனே அடி எடுத்துக் கொடுக்கிறார். பெரியபுராணத்தில் பதினைந்து இடங்களில் உலகெலாம் என வருவதைக் காணலாம். முடிகிறபோதும் "உலகெலாம்" என முடியும். சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தைப் பாடி முடித்தார்.
அநபாயச் சோழர் நூல் முற்றுப்பெற்றதைக் கேள்வியுற்றார். திருத்தொண்டர் புராணத்தைக் கேட்டுப் பேறெய்துமாறு அன்பர்களுக்கு அழைப்புகள் விடுத்தார். தில்லைக்கூத்தன் திருமுன்னர், சேக்கிழார் பெருமான் திருப்புராணத்தை ஓதிப் பொருளுரைக்கத் தொடங்கினார். அத்தொண்டு, சித்திரைத் திங்களில் திருவாதிரை நாளில் தொடங்கப்பெற்றது. மறு ஆண்டு அதே திங்களில் முற்றுப்பெற்றது. திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாந் திருமுறை என்று வழங்கலாயிற்று.
சேக்கிழார் பெருமான் தில்லையிலேயே தங்கலானார். நாடோருந் தில்லைக்கூத்தனை வழிபட்டு வந்தார். சிவபெருமான் அவருக்குத் தமது திருவடி நீழலை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக