திருச்சிற்றம்பலம்
புகழ்த்துணை நாயனார் புராணசாரம்
![]() |
புகழ்த்துணை நாயனார் |
தம் கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசி புரிந்தும்
எம் கோமான் தனை விடுவேன் அல்லேன் என்று இராப் பகலும்
கொங்கார் பன் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார் (4128)
புகழ்த்துணை நாயனார் செருவில்லிபுத்தூரிலே ஆதி சைவ மரபிலே பிறந்தவர். அவர் சிவபெருமானை முறைப்படி அர்ச்சித்து வந்தார். வருநாளில், பஞ்சம் நேர்ந்தது. நாயனார் பஞ்சத்தைக் கருதாது தமது தொண்டைக் குறையில்லாமல் நிகழ்த்திக் கொண்டிருந்தார். நாளுக்குநாள் அவர் பசியால் மெலிவுறலானார்.
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்திக்
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார் (4129)
நாயனார் ஒருநாள் திருமஞ்சனம் மாட்டும்போது திருக்குடம் தேவதேவன் திருமுடிமீது விழுந்தது. அதுகண்ட நாயனார் சிவசந்நிதியில் விழுந்தார். அயர்ந்தார். திருவருளால் அவருக்கு உறக்கம் வந்தது.
சங்கரன் தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்கண் அருள் புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார் (4130)
சிவபெருமான் அவர்தம் கணவிலே தோன்றி, “பஞ்சம் ஒழியும் வரை, நாள்தோரும் ஒரு காசு இங்கே வைப்போம். அதைப் பெற்றுக்கொள்” என்று அருளிச் சென்றார். நாயனார் விழித்து எழுந்தார். ஒரு காசு பீடத்தின் கீழே இருப்பதைக் கண்டார். மகிழ்வெய்தினார். அக்காசு பெற்று வாழ்ந்து வந்தார். பஞ்சம் ஒழிந்தது. நாயனார் தமது திருத்தொண்டை வழுவாது செய்து சிவபதம் சேர்ந்தார்.
குருபூசை: ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக