திருச்சிற்றம்பலம்
அதிபத்த நாயனார் புராணசாரம்
முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் (4002)
நாகப்பட்டினத்திலே நுளைப்பாடியிலே, வளைஞர் குலத்திலே பிறந்த, பரதவர்க்குத் தலைவர் அதிபத்த நாயனார் என்பவர். அவர் சிவபத்தியில் சிறந்தவர். வலைபடும் மீன்களில் தலைமீனைச் சிவபெருமானுக்கென்று கடலிலே விடுவது அவரது வழக்கம். வலையில் ஒரே ஒரு மீன்படினும் அதனைச் சிவபெருமானுக்கென்றே அவர் கடலில் விடுவார்.
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் (4003)
சிவபெருமானின் திருவருளால் நாள்தோரும் ஒரே ஒரு மீனே கிடைப்பதாயிற்று. வழக்கம் போல அதிபத்தர் அதனைக் கடலிலே விட்டு வந்தார். அவரது செல்வம் சுருங்கிற்று. சுற்றங்கள் உணவின்றி வருந்தின.உணவின்மையால் நாயனார் திருமேனியும் மெலிந்தது. அது குறித்து அவர் வருந்துவதில்லை. சிவபத்தியில் மட்டுமே இருந்த அவர்க்குத் தளர்ச்சி தோன்றவில்லை.
ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் (4006)
ஒருநாள் வலையில் பொன்மீன் ஒன்றே அகப்பட்டது. அதை வளைஞர் அதிபத்தர் முன்னிலையில் கொண்டுவந்தார். அவர் அதைக் கண்டு, "இஃதென்ன பொன் மீன்! உறுப்புகளிலும் நவமணிகள் அமைந்திருக்கின்றன. இது சிவபெருமானுக்கு ஆக!! “ என்று அதனையும் கடலிலே விடுத்தார். அப்போது சிவபெருமான் காட்சியளித்தார். நாயனார் அகங்குழைந்து தொழுதார். சிவபெருமான் அவருக்குச் சிவலோக வாழ்வு தந்தருளினார்.
குரு பூசை: ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக